கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 20, 2026

டிஜிட்டல் கைது (Digital Arrest) மோசடிகள்: நீங்கள் பாதிக்கப்பட்டவரா அல்லது அடுத்த வரிசையில் இருப்பவரா?
இதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்: உங்கள் தொலைபேசி ஒலிக்கிறது. மறுமுனையில் பேசும் முன்பின் தெரியாத ஒருவர், தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி அல்லது சைபர் கிரைம் (இணையக் குற்றத் தடுப்பு) அதிகாரி என்று அறிமுகப்படுத்துகிறார். உங்கள் இதயம் வேகமாகத் துடிக்கிறது. உங்கள் வங்கிக் கணக்கு விசாரணையில் இருப்பதாகவும், அல்லது இன்னும் மோசமாக, நீங்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவீர்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் பணம் அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கோருகிறார்கள், நீங்கள் சுதாரிப்பதற்குள், எல்லாவற்றையும் இழக்க நேரிடலாம்.
இதுவே “டிஜிட்டல் கைது மோசடி” (Digital Arrest Scam) எனும் பயங்கரமான யதார்த்தமாகும். இது பயம், குழப்பம் மற்றும் நம்பிக்கையை இலக்காகக் கொண்டு வளர்ந்து வரும் ஒரு இணைய மோசடியாகும். மோசடிக்காரர்கள் அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் டெலிகிராம் (Telegram) போன்ற செயலிகள் மூலம் அதிகாரிகளைப் போல நடித்து உங்களைத் தொடர்புகொள்கிறார்கள்.
டிஜிட்டல் கைது மோசடி என்றால் என்ன?
மோசடிக்காரர்கள் மக்களைத் தொடர்புகொண்டு, அவர்கள் ஏதோ ஒரு குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுவார்கள். அவர்கள் பின்வருமாறு கூறலாம்:
- “உங்கள் தொலைபேசி இலக்கம் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டுள்ளது.”
- “உங்கள் வங்கிக் கணக்கு விசாரணையில் உள்ளது.”
- “நீங்கள் உடனடியாக ஒத்துழைக்காவிட்டால் கைது செய்யப்படுவீர்கள்.”
அவர்கள் பெரும்பாலும் உத்தியோகபூர்வமான மொழியைப் பயன்படுத்துவதுடன், உண்மையானவர்கள் போலக் காட்டிக்கொள்ள போலி அடையாள அட்டைகள் அல்லது ஆவணங்களைக் கூடக் காட்டலாம்.
மோசடிக்காரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்?
மோசடிக்காரர்கள் பொதுவாக:
- தெரியாத எண்களிலிருந்து (Unknown numbers) அழைப்பார்கள்.
- உங்களை நீண்ட நேரம் அழைப்பில் காத்திருக்க வைப்பார்கள்.
- குடும்பத்தினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ தெரிவிக்க வேண்டாம் என்று கூறுவார்கள்.
- “சரிபார்ப்பு” (Verification) அல்லது “தீர்விற்காக” (Clearance) பணம் செலுத்துமாறு கேட்பார்கள்.
- மிரட்டல்களை உண்மையானதாகக் காட்ட வீடியோ அழைப்புகள் அல்லது மெசேஜிங் செயலிகளைப் பயன்படுத்துவார்கள்.
இந்த உத்திகள் பயத்தையும் அவசரத்தையும் உருவாக்குவதற்காகத் திட்டமிடப்பட்டவை, இதனால் எவரும் இதில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது.
மக்கள் ஏன் அவர்களை நம்புகிறார்கள்?
டிஜிட்டல் கைது மோசடிகள் வெற்றிபெறக் காரணங்கள்:
- பயம் தெளிவான சிந்தனையைத் தடுக்கிறது.
- மக்கள் பொதுவாக அதிகாரத்தில் இருப்பவர்களை மதிக்கிறார்கள்.
- அவசரமான மிரட்டல்கள் மக்களை உடனடியாகச் செயல்படத் தூண்டுகின்றன.
ஏமாற்றப்படுவதற்கு நீங்கள் கவனக்குறைவாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. இந்த மோசடிகள் மக்களை ஏமாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.
அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் யார்?
இப்படியான மோசடிகள் பற்றி போதிய அறிவில்லாத எவரும் இதனால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது. மோசடிக்காரர்கள் தங்களின் செய்திகளை மிகவும் உண்மையானதாகவும், நம்பத்தகுந்ததாகவும் உருவாக்குகின்றனர். எனவே, இதுபோன்ற மோசடிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதும், அவ்வப்போதைய தகவல்களை அறிந்தும் இருப்பதே, நீங்கள் இவற்றுக்கு பலியாவதிலிருந்தும் ஏமாற்றப்படுவதிலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் மிகச்சிறந்த வழியாகும்.
எச்சரிக்கை அறிகுறிகள்
பின்வரும் சந்தர்ப்பங்களில் அவதானமாக இருங்கள்:
- உடனடியாகக் கைது செய்யப்படுவீர்கள் என்று மிரட்டப்பட்டால்.
- அழைப்பை இரகசியமாக வைக்குமாறு கேட்கப்பட்டால்.
- உடனடியாகப் பணத்தை அனுப்புமாறு (Transfer) கூறப்பட்டால்.
- அதிகாரிகள் வட்ஸ்அப், டெலிகிராம் அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் உங்களைத் தொடர்புகொண்டால்.
உண்மையான அதிகாரிகள் இவ்வாறு செயல்பட மாட்டார்கள். எந்தவொரு உண்மையான பொலிஸ் அல்லது நீதிமன்ற அதிகாரியும் தொலைபேசியில் இரகசியமாகப் பணம் கேட்க மாட்டார்கள்.
உங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது?
- அமைதியாக இருங்கள், பதற வேண்டாம்.
- ஒருபோதும் பணத்தை அனுப்பவோ அல்லது தனிப்பட்ட விவரங்களைப் பகிரவோ வேண்டாம்.
- அழைப்பை உடனடியாகத் துண்டியுங்கள்.
- உத்தியோகபூர்வ வழிகள் மூலம் தகவலைச் சரிபாருங்கள்.
- நடவடிக்கை எடுப்பதற்கு முன் உங்களுக்கு நம்பிக்கையான ஒருவரிடம் பேசுங்கள்.
சற்று நிதானித்துச் சிந்திப்பது பாரிய இழப்பைத் தடுக்கலாம்.
நீங்கள் குறிவைக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
- உடனடியாகத் தொலைபேசி இணைப்பைத் துண்டியுங்கள்.
- அந்த இலக்கத்தை பிளொக் (Block) செய்யுங்கள்.
- அழைப்பு விவரங்கள் (Call logs) அல்லது குறுஞ்செய்திகளை ஆதாரமாகச் சேமித்து வையுங்கள்.
- பணம் அனுப்பப்பட்டிருந்தால் உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளுங்கள்.
- உங்களது பிரதேச அதிகாரிகளிடம் இந்த மோசடி குறித்து முறைப்பாடு செய்யுங்கள்.
ஆரம்ப நிலையிலேயே நடவடிக்கை எடுப்பது உங்களை மேலும் இழப்புகளிலிருந்து காப்பாற்றும்.
நினைவில் கொள்ளுங்கள்
எந்தவொரு உண்மையான அதிகாரியும் தொலைபேசி அழைப்பின் மூலம் உங்களைக் கைது செய்ய மாட்டார்கள். எந்தவொரு உத்தியோகபூர்வ நடைமுறைக்கும் இரகசியப் பணப் பரிமாற்றங்கள் தேவைப்படாது.
விழிப்புணர்வும் அவதானமுமே உங்களின் சிறந்த பாதுகாப்பாகும்.
ஆதாரம்:
https://www.bloomberg.com/
