கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 19, 2026
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

திருஷா தனது வீட்டில் ஓர் அமைதியான தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பிடித்தமான அவளுடைய ஸ்பாட்டிபை (Spotify) பாடல் பட்டியலைக் கேட்டுக் கொண்டே சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தவாறு இருந்தாள். அது ஒரு சாதாரண, அமைதியான மாலைப் பொழுதாக இருந்தது.
திடீரென்று, அவளுடைய டிக்டொக் (TikTok) இன்பாக்ஸில் (inbox) ஒரு குறுஞ்செய்தி வந்தது.
(டிங்… ஒரு புது செய்தி…)
அறிமுகமில்லா டிக்டொக் கணக்கு:
உங்கள் நிர்வாண புகைப்படம் ஒரு ஆபாச வலைத்தளத்தில் உள்ள காணொளியில் உள்ளது. உங்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியும் அங்கு காட்டப் பட்டுள்ளன.
திருஷா:
நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? இதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
அறிமுகமில்லா டிக்டொக் கணக்கு:
உங்கள் விபரங்களை நாம் அந்த வலைத்தளத்தில் இருந்து தான் கண்டறிந்தோம். அவ்வாறு தான் நாங்கள் உங்களை டிக்டொக்கில் தொடர்பு கொண்டோம்.
(அவளது மின்னஞ்சலின் ஒரு பகுதியையும் அவளது தொலைபேசி எண்ணின் முதல் இலக்கங்களையும் காட்டும் திரைக்காட்சிகள் (screenshots) அனுப்பப் பட்டது, மீதமுள்ள விபரங்கள் மறைக்கப் பட்டிருந்தன)
திருஷா:
இவை அனைத்தும் என்னுடைய விபரங்கள்… ஆனால் ஏன் சில பகுதிகள் மறைக்கப் பட்டுள்ளன?
அறிமுகமில்லா டிக்டொக் கணக்கு:
வலைத்தளத்தில் இவை இவ்வாறு தான் காண்பிக்கப்படும்.
திருஷா:
வலைத்தள இணைப்பை எனக்கு அனுப்புங்கள். நான் அதை சரிபார்க்க வேண்டும்.
அறிமுகமில்லா டிக்டொக் கணக்கு:
என்னால் இணைப்பை அனுப்ப முடியாது. என்னாலும் உள்நுழைய முடியாது. அது ஒரு ஆபாச தளம்.
திருஷா:
அப்படி என்றால் இது உண்மை தானா என்று நான் எவ்வாறு தெரிந்து கொள்வது?
அறிமுகமில்லா டிக்டொக் கணக்கு:
நீங்கள் கேள்விகள் கேட்பதற்கான நேரம் இப்போது இல்லை. நீங்கள் இதை தீர்ப்பதற்கு விரைவாக செயல்பட வேண்டும்.
திருஷா:
நான் என்ன செய்ய வேண்டும்?
அறிமுகமில்லா டிக்டொக் கணக்கு:
என்னால் இனி எதுவும் செய்ய முடியாது. நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
(டிக்டொக் கணக்கு மறைந்து போகிறது)
(பின்னர், மற்றொரு டிக்டொக் கணக்கிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வருகிறது)
இரண்டாவது கணக்கு:
எங்களால் உங்களது காணொளியை அகற்ற உதவ முடியும்.
திருஷா:
நீங்கள் யார்?
இரண்டாவது கணக்கு:
இவ்வாறான பிரச்சினைகளை நாங்கள் கையாளுகிறோம். ஆனால் நீங்கள் கட்டாயமாக ஒத்துழைக்க வேண்டும்.
திருஷா:
உங்களுக்கு என்ன வேண்டும்?
இரண்டாவது கணக்கு:
இலங்கை பணம் ரூபாய் 600,000 செலுத்துங்கள் இல்லாவிடில் அதே போன்ற உங்களுடைய ஒரு நிர்வாண காணொளியை அனுப்புங்கள்.
திருஷா:
நான் எதற்காக அவ்வாறு செய்ய வேண்டும்?
இரண்டாவது கணக்கு:
நாங்கள் காணொளிகளை ஒப்பிட்டுப் பார்த்து, அது நீங்கள் இல்லை என்பதை உறுதிப் படுத்துவோம். பின்னர் அந்த வலைத்தளம் அதை அகற்றி விடும்.
அவள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள், பின்னர் சமீபத்தில் ஹிதவதியில் இருந்து பார்த்த ஒரு டிக்டொக் காணொளி அவளது ஞாபகத்திற்கு வந்தது. அந்த காணொளியில் உள்ள கதை அவளுக்கு தற்போது என்ன நடக்கிறது என்பதற்கு மிகவும் ஒத்திருந்தது. அதன் காரணமாக, அவள் ஹிதவதியைத் தொடர்பு கொள்ள முடிவு செய்தாள். ஹிதவதி் அவளது கதையை கவனமாகவும் அமைதியாகவும் கேட்டார்கள், மேலும் புகைப்பட எடிட்டிங் மற்றும் கையடக்கப் பயன்பாடுகளைப் பயன்படுத்தி இது போன்ற புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எளிதாக உருவாக்க முடியும் என்று விளக்கி கூறினார்கள். அவள் மீது எந்தத் தவறும் இல்லை எனவும், அவள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் அவளிடம் கூறப்பட்டது. ஹிதவதி அவளிடம் இவ்விடயம் தொடர்பான இணைப்புகளையும், அனைத்து டிக்டொக் குறுஞ்செய்திகளின் காட்சித்திரைகளையும் எடுத்து அவற்றை ஆதாரமாக வைத்திருக்கக் கூறினார்கள். இவ்வாறான காட்சித்திரைகள் CID – சமூக ஊடகப் பிரிவில் முறைப்பாடு செய்ய
அவசியமானது என தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த நபருடனான அனைத்து விதமான தொடர்புகளையும் நிறுத்தி, அக்கணக்கைத் தடை செய்து, டிக்டொக்கில் முறைப்பாடு செய்யுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த சூழ்நிலை எவ்வாறான ஓர் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொண்ட ஹிதவதி, சிறப்பு மனநல தொலைபேசி இலக்கம் 1926 ஐப் பகிர்ந்து கொண்டனர், மேலும் அவர் பயம், பதட்டம் அல்லது உணர்ச்சி ரீதியான அழுத்தம் ஏற்படின் அந்த இலக்கத்திற்கு அழைக்குமாறு அவரை ஊக்குவித்தனர்.
முன்னெச்சரிக்கை குறிப்புகள்:
- உங்களை பயமுறுத்தும் செய்திகள் அல்லது அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம். எதையும் செய்வதற்கு முன் சிறிது நேரம் நிறுத்தி நன்றாக யோசிக்கவும்.
- கோரிக்கைகளுக்கு உடன்படுவதையோ அல்லது மோசடி செய்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதையோ தவிர்க்கவும். அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல.
- அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் அனைத்து குறுஞ்செய்திகள், அழைப்புகள் அல்லது உரையாடல்களின் காட்சித் திரைகளை எடுத்து அவற்றை ஆதாரமாக சேமித்து வைத்துக் கொள்ளவும்.
- குடும்ப உறுப்பினர் அல்லது ஹிதவதி போன்ற நம்பகமான நபர் அல்லது அமைப்பிடம் கலந்துரையாடுங்கள். இந்த பிரச்சினையை தனியாக கையாள வேண்டாம்.
- உங்கள் படங்கள், காணொளிகள் அல்லது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வேறு ஏதேனும் உள்ளடக்கம் இணையத்தில் வெளியிடப்பட்டால், முறையிடுவது மற்றும் அவற்றை அகற்றுவது போன்ற நடவடிக்கைகளுக்கான ஆதரவிற்காக ஹிதவதியைத் தொடர்பு கொள்ளவும்.
- தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தொடர்புடைய ஆதாரங்களை (இணைப்புகள், காட்சித் திரைகள் போன்றவை) தலைமை அதிகாரி, குற்றப் புலனாய்வுத் துறை, கொழும்பு 01 என்ற முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட தபால் மூலமாகவோ அல்லது dir.ccid@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ CID-யிடம் கையளிக்கலாம்.
- நீங்கள் மன அழுத்தம், வருத்தம் அல்லது மனதளவில் சோர்வடைந்திருப்பதாக உணர்ந்தால், 1926 (சிறப்பு மனநல சேவை தொலைபேசி இலக்கம்) அல்லது சுமித்ரயோ அமைப்பைத் தொடர்பு கொள்ளவும்.
