கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 19, 2026

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் கற்பனையானவை.

நள்ளிரவை நெருங்கிய நேரத்தில் மாயாவின் கைப்பேசி தொடர்ந்து அதிரத் தொடங்கியது.

ஒன்றன் பின் ஒன்றாகச் செய்திகள் வந்துகொண்டிருந்தன.

அவளுடைய நெருங்கிய தோழி ஒரு செய்தியை அனுப்பியிருந்தாள்:

“மாயா, உன் அப்பாவுக்கு என்ன நடந்தது? அவர் நலமாக இருக்கிறாரா?”

குழப்பமடைந்த மாயா பதிலளித்தாள்:

“நீ என்ன சொல்கிறாய்?”

அவளுடைய தோழி ஒரு திரைப்பிடிப்பை (Screenshot) அனுப்பினாள்.

மாயா அதிர்ச்சியடைந்தாள்.

அவளுடைய WhatsApp கணக்கிலிருந்து அவளுடைய தொடர்புப் பட்டியலில் இருந்த பலருக்கும் ஒரு செய்தி அனுப்பப்பட்டிருந்தது:

“என் அப்பாவுக்கு அவசரமாகச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கான பணத்தை உடனடியாகத் திரட்ட வேண்டியுள்ளது. நான் இப்போது மிகவும் சிரமத்தில் இருக்கிறேன். உங்களால் உதவ முடிந்தால், சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை, தயவுசெய்து இந்தக் கணக்கிற்குப் பணம் அனுப்புங்கள். இவ்வாறு கேட்பதற்கு மன்னிக்கவும்.”

அந்தச் செய்தியுடன் அவளுடைய அப்பாவின் புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால், மாயா அந்தச் செய்தியை அனுப்பவில்லை. அவள் உடனடியாகத் தனது உரையாடல்களைச் சரிபார்த்தாள். அதே செய்தி அவளுடைய உறவினர்கள், பல்கலைக்கழக நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் பல மாதங்களாகத் தொடர்பில் இல்லாத சிலருக்குக்கூட அனுப்பப்பட்டிருந்தது.

அப்போது அவளுடைய உறவினர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார்.

“மாயா, நான் ஏற்கனவே ரூ. 100,000 அனுப்பிவிட்டேன். நீ சிரமத்தில் இருப்பதாக நினைத்தேன்.”

அவளுடைய மனம் கலங்கியது. உடனடியாக மேலும் பணம் அனுப்ப வேண்டாம் என்று அவரிடம் கூறியதுடன், தனது குடும்பத்தினரையும் எச்சரித்தாள்.

இது எவ்வாறு நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியாததே அவளை மிகவும் பயமுறுத்தியது.

அவள் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான இணைப்பையும் கிளிக் செய்யவில்லை.

அவள் எந்த OTP-யையும் பகிரவில்லை.

அவள் எந்த QR குறியீட்டையும் ஸ்கேன் செய்யவில்லை.

அவள் தனது கடவுச்சொல்லை யாரிடமும் கொடுக்கவில்லை.

என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அவள் முயற்சித்துக்கொண்டிருந்தபோது, அவளுடைய கணக்கிலிருந்து மற்றொரு செய்தி வந்தது.

“தயவுசெய்து எனக்கு அழைப்பு எடுக்காதீர்கள். நான் இப்போது மருத்துவமனை தொடர்பான வேலைகளில் இருக்கிறேன்.”

அப்போதுதான் தனது கணக்கை வேறொருவர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதை மாயா உணர்ந்தாள்.

அவள் இணையத்தில் உதவியைத் தேடியபோது, Hithawathi நிறுவனத்தின் விழிப்புணர்வு வழிகாட்டல்களைக் கண்டாள். அவள் Hithawathi நிறுவனத்தைத் தொடர்புகொண்டு நடந்தவற்றை விளக்கினாள்.

சந்தேகத்திற்கிடமான இணைப்பைக் கிளிக் செய்யாமலோ அல்லது சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செய்தியுடனும் தொடர்புகொள்ளாமலோ, பாதுகாப்புக் குறைபாடுகளைப் பயன்படுத்திக்கொள்ளும் இணையத் தாக்குதலின் மூலம் தனது WhatsApp கணக்கு பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று Hithawathi மாயாவுக்கு விளக்கியது.

கணக்கை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளை முயற்சித்தல், கணக்கைப் பாதுகாத்தல், இணைக்கப்பட்ட சாதனங்களைச் சரிபார்த்தல், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் செயல்படுத்துதல், பணம் கோரும் செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று தனது தொடர்பில் உள்ளவர்களை எச்சரித்தல் மற்றும் மேலதிக தொழில்நுட்ப உதவிக்காக உரிய நிறுவனங்களிடம் சம்பவத்தைப் புகாரளித்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

  • WhatsApp, உங்கள் கைப்பேசி மற்றும் ஏனைய செயலிகளைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளுங்கள்.
  • WhatsApp கணக்கில் இரு-படி சரிபார்ப்பை (Two-step verification) செயல்படுத்துங்கள்.
  • இணைக்கப்பட்ட சாதனங்களைத் தொடர்ந்து சரிபார்த்து, உங்களுக்குத் தெரியாத சாதனங்களை நீக்குங்கள்.
  • யாராவது திடீரெனப் பணம் கேட்டால், வேறொரு தொடர்பு வழியைப் பயன்படுத்தி அந்தக் கோரிக்கையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துங்கள்.
  • உங்கள் கணக்கிலிருந்து வந்திருந்தாலும், வழக்கத்திற்கு மாறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அறிவுறுத்துங்கள்.
  • சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் தென்பட்டால், முடிந்தவரை விரைவாகப் புகாரளியுங்கள்.
  • உங்கள் கணக்கு பாதிக்கப்பட்டிருந்தால், நம்பகமான நிறுவனங்களிடம் உதவி பெறுங்கள்.