கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 15, 2026

பல நாடுகளில் ஒக்டோபர் மாதம் இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. எனவே, டிஜிட்டல் உலகில் நாம் எவ்வாறு நம்மைப் பாதுகாத்துக்கொள்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். நமது அன்றாட நடவடிக்கைகள் அதிகளவில் டிஜிட்டல் உலகிற்கு மாறிவரும் நிலையில், இணையத்தில் பாதுகாப்பாக இருப்பது மிகவும் முக்கியமானதாகிறது.
அன்புக்குரியவர்களுடன் தொடர்புகொள்வது, பணம் செலுத்துவது, கல்வி கற்பது மற்றும் வேலை செய்வது என நமது அன்றாட வாழ்க்கையின் பெரும்பகுதி இன்று இணையத்திலேயே நடைபெறுகிறது. ஆனால், நமது டிஜிட்டல் வாழ்க்கை விரிவடையும்போது, இணையக் குற்றவாளிகள் நம்மைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் வழிகளும் அதிகரித்து வருகின்றன.
நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய தற்போதைய இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் மோசடிகளில் சிலவற்றைப் பார்ப்போம்.
01. நீங்கள் எதையும் கிளிக் செய்ய வேண்டிய அவசியம்கூட இல்லாமல் இருக்கலாம்!
அறிமுகமில்லாத இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று நாம் அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறோம். ஆனால், சில இணையத் தாக்குதல்களுக்கு நீங்கள் எதையும் கிளிக் செய்ய வேண்டிய அவசியம்கூட இருக்காது.
Zero-click attacks (பூஜ்ஜியக் கிளிக் தாக்குதல்கள்) எனப்படும் தாக்குதல்கள், சந்தேகத்திற்கிடமான செய்தியுடன் பயனர் எவ்விதத் தொடர்பும் கொள்ளாமலேயே செயலிகள் அல்லது சாதனங்களில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இத்தகைய தாக்குதல்கள் அண்மையில் WhatsApp கணக்குகள் கைப்பற்றப்படுவதுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் கைப்பற்றப்பட்ட கணக்குகளைப் பயன்படுத்தி நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது குழுக்களில் உள்ளவர்களுக்குச் செய்திகளை அனுப்பிப் பணம் கோரலாம்.
02. நீங்கள் பார்ப்பதை நம்ப முடியுமா?
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால், ஒருவர் உண்மையில் சொல்லாத ஒன்றைச் சொல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மிகவும் தத்ரூபமான காணொளிகளை உருவாக்க முடியும்.
பிரபலமான நபர்களின் போலியான காணொளிகள் மூலம் மோசடியான முதலீட்டு வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் அல்லது பிற மோசடிகள் விளம்பரப்படுத்தப்படலாம்.
ஒரு காணொளியில் நமக்குப் பரிச்சயமான முகம் தெரிகிறது என்பதற்காக அதில் கூறப்படும் தகவல்கள் உண்மையானவை என்று அர்த்தமல்ல.
03. “அந்தக் குரலை எனக்குத் தெரியும்!”
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒருவரின் குரலையும் போலியாக உருவாக்க முடியும்.
மோசடிக்காரர் ஒருவர், குடும்ப உறுப்பினர், நண்பர், சக ஊழியர் அல்லது நம்பிக்கைக்குரிய வேறு ஒருவரைப் போலக் குரலைப் பாவித்து, பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களைக் கோரலாம். இதற்காக அவசரமான சூழ்நிலை இருப்பதாகவும் கூறலாம்.
உங்களுக்குப் பரிச்சயமான குரலில் இருந்து வழக்கத்திற்கு மாறான கோரிக்கை வந்தால், உடனடியாகப் பதிலளிக்காமல் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். வேறொரு தொடர்பு வழியைப் பயன்படுத்தி அந்தக் கோரிக்கையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துங்கள்.
04. மோசடிக்காரர்களுக்கு AI உதவும்போது
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தனிநபர்களுக்குப் பொருத்தமானதாகவும் நம்பகமானதாகவும் தோன்றும் மோசடிச் செய்திகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கக் குற்றவாளிகளுக்கு உதவுகிறது. ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் அல்லது ஆர்வங்களை அடிப்படையாகக் கொண்டு செய்திகள் உருவாக்கப்படுவதால், அவை உண்மையானவை என்று நம்புவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
இதனால், அனைவருக்கும் ஒரே மாதிரியாக அனுப்பப்படும் வெளிப்படையான “மொத்த மோசடிச் செய்திகள்” குறைந்து, ஒவ்வொருவரையும் இலக்காகக் கொண்டு தனிப்பயனாக்கப்பட்ட செய்திகள் அதிகரிக்கக்கூடும்.
05. போலியான உதவியும் ஆபத்தானதாக இருக்கலாம்!
சில மோசடிகள், போலியான பிழைச் செய்திகள் அல்லது தொழில்நுட்ப உதவி வழிமுறைகளைப் பயன்படுத்தி, உங்கள் சாதனத்தில் ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாக நம்ப வைக்கின்றன.
ஒரு இணையத்தளம் குறிப்பிட்ட படிகளைப் பின்பற்றுமாறும், ஏதாவது ஒன்றை நிறுவுமாறும் அல்லது ஒரு கட்டளையை நகலெடுத்து ஒட்டுமாறும் உங்களிடம் கூறலாம். உதவியாகத் தோன்றும் இந்த வழிமுறைகள் உண்மையில் குற்றவாளிகள் உங்கள் சாதனம் அல்லது கணக்கை அணுகுவதற்கு வழிவகுக்கலாம்.
06. AI கருவிகள்கூட நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம்!
செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் பிரபலமடைந்து வரும் நிலையில், குற்றவாளிகள் தீங்கிழைக்கும் AI செயலிகள், உலாவி நீட்சிகள் (Browser Extensions) மற்றும் பிற கருவிகளையும் உருவாக்கி வருகின்றனர். இவற்றில் சில, தனிப்பட்ட தகவல்கள், கோப்புகள் அல்லது இணையக் கணக்குகளை அணுகுவதற்குத் தேவையற்ற அனுமதிகளைக் கோரலாம்.
உருவாக்கும் செயற்கை நுண்ணறிவை (Generative AI) தமது செயல்பாட்டின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தும் தீங்கிழைக்கும் மென்பொருட்களையும் இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இதன் மூலம், மோசடிகளை உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல், தீங்கிழைக்கும் மென்பொருட்களின் செயல்பாட்டிலும் குற்றவாளிகள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடும் என்பது தெளிவாகிறது.
எனவே, நம்பகமான மூலங்களிலிருந்து மட்டுமே AI கருவிகளைப் பதிவிறக்குங்கள். அவற்றை நிறுவுவதற்கு முன் அவை கோரும் அனுமதிகளையும் சரிபாருங்கள்.
07. வேலைவாய்ப்பு ஒன்றும் இணைய அச்சுறுத்தலாக மாறலாம்!
ஒவ்வொரு இணைய அச்சுறுத்தலும் சந்தேகத்திற்கிடமான செய்தி அல்லது இணையத்தளத்திலிருந்து தொடங்குவதில்லை.
இணையத்தில் வேலை தேடுபவர்களும் அதிக சம்பளம் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறும் போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மூலம் இலக்காக்கப்படலாம். சிலர் போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களால் ஏமாற்றப்பட்டு, ஆட்கடத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, இணைய மோசடிச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, இணையத்தில் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்பும், தனிப்பட்ட ஆவணங்களைப் பகிர்வதற்கு முன்பும் அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பது அவசியமாகும்.
நாம் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கலாம்?
இணைய அச்சுறுத்தல்கள் தொடர்ந்து மாறிவரும் நிலையில், சில எளிய பழக்கவழக்கங்கள் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்:
- செயல்படுவதற்கு முன் சிறிது நேரம் சிந்தியுங்கள், குறிப்பாக, அவசரத்தையோ பயத்தையோ ஏற்படுத்தும் செய்திகள் வரும்போது எச்சரிக்கையாக இருங்கள்.
- வழக்கத்திற்கு மாறான கோரிக்கைகளைச் சரிபாருங்கள், நம்பகமான, தனித்துவமான மற்றொரு தொடர்பு வழியைப் பயன்படுத்தி அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துங்கள்.
- ஒரு காணொளி அல்லது குரல் உண்மையாகத் தெரிகிறது அல்லது கேட்கிறது என்பதற்காக மட்டும் அதை நம்பாதீர்கள்.
- உங்கள் கைப்பேசி, இயங்குதளம் மற்றும் செயலிகளைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளுங்கள்.
- முடிந்தவரை இரு-படி சரிபார்ப்பை (Two-step verification) உங்கள் கணக்குகளில் செயல்படுத்துங்கள்.
- நம்பகமான மூலங்களிலிருந்து மட்டுமே செயலிகளையும் AI கருவிகளையும் பதிவிறக்குங்கள் மற்றும் அவை கோரும் அனுமதிகளைச் சரிபாருங்கள்.
- இணைய வேலைவாய்ப்புகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள், குறிப்பாக, வழக்கத்திற்கு மாறாக அதிக வருமானம் தருவதாகக் கூறும் வாய்ப்புகளைச் சரிபாருங்கள்.
- சந்தேகம் ஏற்பட்டால், நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் ஆலோசனை பெறுங்கள், பணம் அனுப்புவதற்கு, தகவல்களைப் பகிர்வதற்கு அல்லது வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு முன் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
விழிப்புடன் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்.
தொழில்நுட்பம் தொடர்ந்து மாறிவருகிறது. அதனைத் தவறாகப் பயன்படுத்தும் வழிகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒரு மோசடியை உடனடியாக அடையாளம் காண முடியாமல் போகலாம். ஆனால், செயல்படுவதற்கு முன் நின்று சிந்தித்து, சரிபார்க்கும் பழக்கத்தை நாம் வளர்த்துக்கொள்ளலாம்.
நிறுத்துங்கள். சிந்தியுங்கள். சரிபாருங்கள். உறுதிப்படுத்துங்கள்.
சில நேரங்களில், ஒரு செய்தி, காணொளி, குரல் அல்லது வாய்ப்பைப் பெறும்போது பாதுகாப்பான நடவடிக்கை என்பது சிறிது நேரம் நின்று நம்மை நாமே ஒரு கேள்வி கேட்டுக்கொள்வதாகும்:
“இது உண்மையானது என்பதை நான் எவ்வாறு உறுதிப்படுத்துவது?”
