கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 20, 2026
இதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் கற்பனையானவை

கசுன் என்ற பல்கலைக்கழக மாணவர், பல வாரங்களாக ஒரு பயிற்சிப் பணியைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், சில நிறுவனங்களிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை அல்லது பணியிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஒரு மாலை, Instagram-ஐப் பார்த்துக் கொண்டிருந்தபோது, “Internship Opportunity – Social Media & Content Creation” என்ற ஒரு விளம்பரத்தை அவர் கண்டார்.
அந்த நிறுவனத்தின் பக்கம் மிகவும் தொழில்முறையாகத் தோன்றியது. அதில் ஒரு நிறுவன இலச்சினை (logo), தொடர்ந்து பதிவிடப்பட்ட பதிவுகள், ஊழியர்களின் புகைப்படங்கள் மற்றும் பல பின்தொடர்பவர்கள் இருந்தனர். அனைத்தும் உண்மையானதாகத் தோன்றியது.
கசுன் அந்த இணைப்பின் மூலம் விண்ணப்பித்தார்.
அடுத்த நாள், அவருக்கு WhatsApp மூலம் ஒரு செய்தி வந்தது.
“வணக்கம் கசுன், நான் HR பிரிவைச் சேர்ந்த நதீஷா. எங்கள் பயிற்சித் திட்டத்திற்காக உங்கள் விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.”
ஒரு குறுகிய இணையவழி நேர்காணலுக்குப் பிறகு, அவருக்கு மற்றொரு செய்தி வந்தது.
“வாழ்த்துகள்! உங்களுக்கு பயிற்சிப் பணியை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”
கசுன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இறுதியாக, அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று நினைத்தார்.
பின்னர் ஒரு நிபந்தனை முன்வைக்கப்பட்டது.
“உங்கள் இடத்தை உறுதிப்படுத்த, நீங்கள் ஒரு சிறிய பதிவு கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்தத் தொகை உங்கள் முதல் கொடுப்பனவுடன் திருப்பித் தரப்படும்.”
இது வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றினாலும், இந்த வாய்ப்பை இழக்க கசுன் விரும்பவில்லை. அவர் பணத்தைச் செலுத்தினார்.
சில நாட்களுக்குப் பிறகு, பணியில் சேருவதற்கு முன்பு கட்டாயப் பயிற்சித் தொகுப்பிற்காக பணம் செலுத்த வேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டது. மீண்டும், அந்தப் பணமும் திருப்பித் தரப்படும் என்று அவருக்கு உறுதியளிக்கப்பட்டது.
கசுன் பணம் செலுத்தினார். ஆனால் விரைவில் சந்தேகத்திற்குரிய அறிகுறிகள் தென்படத் தொடங்கின. அவர் பணியில் சேர வேண்டிய தேதி ஒத்திவைக்கப்பட்டது, மேலும் HR பிரதிநிதியைத் தொடர்புகொள்வது கடினமாகியது. முன்பு சில நிமிடங்களிலேயே பதிலளிக்கப்பட்ட செய்திகள், இப்போது பல நாட்களாகப் பார்க்கப்படாமல் இருந்தன.
இறுதியாக, அந்த WhatsApp இலக்கம் பதிலளிப்பதை நிறுத்தியது.
கசுன் நிறுவனத்தின் சமூக ஊடகப் பக்கத்தைப் பார்த்தார். ஆனால் பயிற்சிப் பணியைப் பற்றியோ, தன்னைத் தொடர்புகொண்ட நபர்களைப் பற்றியோ எந்தத் தகவலையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
தான் மோசடிக்கு உள்ளாகியிருக்கலாம் என்று கவலைப்பட்ட கசுன், ஆன்லைன் மோசடிகள் தொடர்பான Hithawathi விழிப்புணர்வு காணொளியைப் பார்த்திருந்த தனது நண்பரிடம் பேசினார். அவரது நண்பர், Hithawathi நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தினார். கசுன், செய்திப் பதிவுகள், பணம் செலுத்திய ரசீதுகள்(Bills), screenshots மற்றும் தொடர்புடைய இணைப்புகளைப் பாதுகாத்து வைத்திருக்குமாறு வழிகாட்டப்பட்டார். மேலும், இந்தச் சம்பவத்தை அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
பின்னர், உண்மையான ஒரு நிறுவனத்தைப் போல ஆள்மாறாட்டம் செய்து வேலை தேடுபவர்களை ஈர்ப்பதற்காகவே அந்த சமூக ஊடகக் கணக்கு உருவாக்கப்பட்டிருந்தது என்பதை கசுன் அறிந்துகொண்டார்.
நம்பிக்கைக்குரிய பயிற்சிப் பணியாகத் தோன்றியது, உண்மையில் விண்ணப்பதாரர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மோசடியாகும்.
தடுப்பு நடவடிக்கைகள்
- பதிவு, பயிற்சி அல்லது பணியிடத்தை உறுதிப்படுத்துவதற்கான கட்டணங்களைச் செலுத்துமாறு கேட்கப்படும் பயிற்சிப் பணிகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள். அந்தக் கட்டணம் திருப்பித் தரப்படும் என்று கூறப்பட்டாலும் கவனமாக இருங்கள்.
- அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மூலம் நிறுவனத்தையும் பணியிட வாய்ப்பையும் சரிபார்க்கவும்.
- தொழில்முறையாகத் தோன்றும் சமூக ஊடகப் பக்கம் உண்மையானது என்று கருத வேண்டாம்.
- Screenshots, ரசீதுகள், செய்திகள் மற்றும் சுயவிவர இணைப்புகளைப் பாதுகாத்து வைத்திருங்கள்.
- சந்தேகத்திற்கிடமான இணையவழிச் சம்பவத்தை எதிர்கொண்டால், வழிகாட்டுதலுக்காக Hithawathi ஐத் தொடர்புகொள்ளுங்கள்.
