கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மே 13, 2026

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

நிமேஷி, தனது மனதை உடைத்துப் போன ஒரு பிரிவுக்குப் பிறகு, மெதுவாக மீண்டு வரத் தொடங்கியிருந்தாள். அப்போது அரவிந்த வந்தான். அன்பான வார்த்தைகள், இரவு நேர அழைப்புகள், தன்னை உண்மையாகப் புரிந்துகொள்கிறார் என்ற உணர்வு — அவளுக்கு அது புதிதாகவும் நிம்மதியாகவும் தோன்றியது.

ஒரு உரையாடல் இன்னொன்றாக மாறியது. மெதுவாக அவள் தனது பயத்தை விட்டுவிட்டு, முழு நம்பிக்கையையும் அவன்மீது வைத்தாள்.

நம்பிக்கை நெருக்கமாக மாறியது. அந்த நெருக்கம், உணர்ச்சி வசப்பட்ட ஒரு தருணத்தில், தனிப்பட்ட புகைப்படங்களைப் பகிரும் அளவிற்கு அவளை இட்டுச் சென்றது.

ஆனால் திடீரென்று, அவன் காணாமல் போனான்.

உடல்நிலை சரியில்லை என்றான்.
அழைப்புகளே இல்லை.
செய்திகளே இல்லை.
முழுமையான அமைதி.

நிமேஷி இன்னும் நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.

பிறகு, எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று வந்தது.

எங்கும் பகிரப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பதிவு.

அதில் இருந்தது…

அவளே.

அவளின் தனிப்பட்ட படம்.

அவள் இதைப் பற்றி அவனை எதிர்கொண்டபோது, அவன் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டான். அதுவே எல்லைக்கோட்டை கடந்த தருணமாக இருந்தது. நிமேஷி தைரியமாக வெளியில் பேசத் தொடங்கினாள்.

இதேவேளை, தனது காதலனின் நடத்தையில் ஏதோ மாறுபாடு இருப்பதை தாருகா உணர்ந்தாள். அவர்களுக்கிடையேயான நெருக்கம் குறைந்து கொண்டே போனது. அமைதி அதிகரித்தது. ஒருநாள், சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியிருந்த ஒரு பதிவை அவள் பார்த்தாள்.

அதைத் திறந்து பார்த்தவுடன், அந்தக் கதை மிகவும் பரிச்சயமாகத் தோன்றியது. பின்னர் ஒரு பெயர் அவளது கவனத்துக்கு வந்தது.

அரவிந்த.

அந்த தருணத்தில் எல்லாம் புரிந்தது.

அவளின் “காதலன்” உண்மையில் அவள் நினைத்த மனிதர் இல்லை.

அவள் நிமேஷியை தொடர்புகொண்டாள். மெதுவாக, இருவரும் ஒரே வலையில் சிக்கியிருப்பதை உணர்ந்தனர்.

அதற்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமானது.

தாருகாவின் தோழிகளில் ஒருவர் பதட்டத்துடன் தொடர்புகொண்டார். தாருகாவின் பெயரில் ஒரு போலி கணக்கு உருவாக்கப்பட்டிருந்தது. அவளது தனிப்பட்ட புகைப்படங்கள் அங்கே பகிரப்பட்டிருந்தன. அவளது தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டிருந்தது. தொடர்ந்து வந்த அழைப்புகள் அவளது வாழ்க்கையை சீர்குலைத்தன.

ஒருகாலத்தில் காதலாகத் தோன்றியது, இப்போது ஆட்டுத்தோலில் மறைந்திருந்த ஓநாயைப் போலத் தெரிந்தது.

மனஅழுத்தத்திலும் பயத்திலும் இருந்த அவர்கள், இறுதியில் ஹிதவதி (Hithawathi) அமைப்பை அணைந்தனர். இது அவர்களின் தவறு அல்ல என்று அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. பாதுகாப்பாக முன்னேறுவதற்கான வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது.

ஹிதவதி, சம்பந்தப்பட்ட இணைப்புகள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்களை ஆதாரமாக சேமித்து வைக்குமாறு அறிவுறுத்தியது. தீங்கிழைக்கும் உள்ளடக்கங்களை அகற்றவும், சமூக ஊடகங்களில் மேலும் பரவாமல் தடுக்கவும் StopNCII வழியாக புகார் செய்ய உதவியது. மேலும், மனநல ஆதரவிற்காக சுமித்ரயோ (Sumithrayo) அமைப்புடனும் அவர்களை இணைத்தது.

முன்னெச்சரிக்கை குறிப்புகள்

  • இணையத்தில் புதியவர்களை முழுமையாக நம்புவதற்கு முன் எச்சரிக்கையாக இருங்கள்.
  • உணர்ச்சி வசப்பட்ட தருணங்களிலும் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது தகவல்களை பகிர வேண்டாம்.
  • இருவரின் சம்மதத்துடன் பகிரப்பட்ட தனிப்பட்ட படங்கள் தொடர்பான பிரச்சினைகளில், சமூக ஊடகங்களில் மேலும் பரவாமல் தடுக்க StopNCII வழியாக புகார் செய்வது சிறந்த தேர்வாகும்.
  • தவறான பயன்பாடு ஏற்பட்டால் உடனடியாக புகார் செய்து, தேவையான ஆதரவை நாடுங்கள்.