கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 18, 2023

நாலிகா ஒரு திருமணமான பெண். அவள் தன்னுடைய வேலைகளை செய்வதிலும், அண்மையில் 5 வயதையடைந்த தனது சிறிய மகளை கவனிப்பதிலும் மிகவும் மும்முரமாக இருந்தாள். பொதுவாக, நாலிகா அதிகாலையில் எழுந்து, உணவு தயாரித்து, மகளை தன் பெற்றோர் வீட்டில் விட்டு, வேலைக்குச் செல்வது தான் வழக்கம். மாலையானதும் அவளுடைய கணவர் மகளை அழைத்துக் கொண்டு வருவார். அவர்களுக்கு முன்பே நாலிகா வீட்டிற்கு வந்துவிடுவாள். அந்த நேரம் மட்டுமே அவளால் சற்று ஓய்வாக இருக்கலாம். எனவே, அந்த ஓய்வு நேரத்தில் தான், அவள் பாடல்களைக் கேட்பாள், சிறிது நேரம் டிவி பார்ப்பாள் அல்லது அவளுடைய பேஸ்புக்கை பார்த்து அதன் மெசஞ்சர் வழியாக நண்பர்களுடன் அரட்டையடிப்பாள்.

நாலிகா பேஸ்புக்கில் கைவினைப் பொருள்கள் பற்றிய பக்கங்களைப் பின்தொடர்ந்து வந்தாள். ஒரு நாள், அவருக்கு மெசஞ்சரில், ஒரு குழு கோரிக்கை (group request) வந்தது. அது பார்க்க கைவினைப் பிரியர்களுக்கான குழுவைப் போல் இருந்தது. உடனே அந்த குழுவில் சேர்ந்தாள். அன்று இரவு, நாலிகா அந்தக் குழுவிலிருந்த ஒருவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்திருப்பதைக் கவனித்தாள். என்றாலும் இரவு உணவு தயாரிப்பதில் மும்முரமாக இருந்ததால் அவள் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

அவள் படுக்கைக்குச் செல்லும் போது மறுபடியும் அக்குழுவிலுள்ள ஒருவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. இம்முறை அவள் அழைப்புக்கு பதிலளிக்க, அழைப்பாளர் இனந்தெரியாத நபரொருவராக இருந்தார்.

இனந்தெரியாத நபர்: ஏய், எப்படி இருக்கிறீர்கள்?

நாலிகா: யார் நீ?

இனந்தெரியாத நபர்: இருவரும், வீடியோ கோலில் பேசுவோம்.

நாலிகா: ஆனால் யார் நீ?

இனந்தெரியாத நபர் அழைப்பை துண்டித்துவிட்டார்..

மறுநாள், நாலிகா தனது கணவருடன் விருந்தொன்றுக்குச் சென்றாள். அன்று இரவு மீண்டும் அதே நபரிடமிருந்து அழைப்பு வந்தது. நாலிகா பதிலளித்தாள்.

இனந்தெரியாத நபர்: ஏய் வீடியோவை ஆன்(on) பண்ண முடியுமா? உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்

நாலிகா வியந்தாள். கடைசியில் வீடியோவை ஆன் (on) செய்தாள்.

இனந்தெரியாத நபர் நீயும் உன் முன்னாள் காதலனும் இருக்கும் சில படங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை எல்லா இடங்களிலும் வெளியிடப் போகிறேன்

இதைக் கேட்ட நாலிகா அச்சமடைந்தாள். அந்த நபருக்கும் நாலிகா பயந்து போயிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது . தன் முன்னாள் காதலனைப் பற்றியோ, தனது பழைய இரகசியத்தைப் பற்றியோ கணவனுக்கு எதுவும் தெரியக்கூடாது என்றே அவள் விரும்பினாள்.

இனந்தெரியாத நபர்: நான் அவற்றை வெளியிட கூடாதென்றால், நான் சொல்வதை நீ செய்ய வேண்டும்

நாலிகா நடுக்கமுற்றாள்.

இனந்தெரியாத நபர்: விரைவில் நான் உன்னோடு மீண்டும் கதைப்பேன். நீ வீடியோவை ஆன் பண்ண வேண்டும். நீயும் உன் கணவரும் தெரியக்கூடிய வகையில் எங்காவது தொலைபேசியை வைத்து, பிறகு நீ அவருடன் அந்தரங்கமான செயல்களில் ஈடுபட வேண்டும். ஆனால் இதை பற்றி நீ அவரிடம் எதுவும் சொல்லக் கூடாது சரியா? புரியும்படி சொல்வதென்றால், உங்கள் அந்தரங்க செயல்களை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதை அவர் தெரிந்து கொள்ளக் கூடாது.

இந்த கேவலமான மனிதனின் கோரிக்கைக்கு உடன்படுவதைத் தவிர நாலிகாவுக்கு வேறு வழி இருக்கவில்லை.

நாலிகா: சரி

அந்த கேவலமானவன் கூறியபடியே நாலிகாவும் செய்தாள். வீடியோ அழைப்பின் மறுபக்கம், நாலிகாவுக்கு தெரியாமலேயே, இனந்தெரியாத அந்நபர் எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டான்.

இந்த அசிங்கமானவனின் விளையாட்டு அனைத்தும் அத்தோடு அங்கேயே முடிந்துவிட்டது என்று நினைத்த நாலிகா, எல்லாவற்றையும் மறந்துவிட்டு மறுநாள் காலையில் வேலைக்கு செல்ல ஆயத்தமானாள். அவள் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, அந்த இனந்தெரியாத நபரிடமிருந்து அவளுக்கு மீண்டும் அழைப்பு வந்தது.

இனந்தெரியாத நபர்: ஏய், எப்படி இருக்கிறீர்கள்? உங்களது கிளிப் (clip) எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

நாலிகா: கிளிப் என்றால்?

இனந்தெரியாத நபர்: ஹா ஹா, நான் எல்லாவற்றையும் பதிவு செய்துள்ளேன். அதை நான் அடிக்கடி பார்த்து வருகிறேன்

நாலிகா: நீ ஒரு வக்கிரமம் பிடித்தவன்.

இனந்தெரியாத நபர்: ஆம், அது சரிதான். நான் ஒரு வக்கிரமம் பிடித்தவன் தான். கூடிய சீக்கிரம் இவற்றை எல்லா இடங்களிலும் வெளியிடுவேன்

பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த நாலிகா தன் போனை அப்படியே வைத்து விட்டாள். வேலைக்குச் சென்றிருந்தும், அவளால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எதையும் செய்யாமல் வெறுமனே இருந்ஹிதவதீயிற்குதாள். அவளில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து கொண்ட நாலிகாவின் பெண் முதலாளி, அவளிடம் சென்று பேசினாள். நாலிகாவும் முதலாளியிடம் எல்லாவற்றையும் கூறினாள். அவளுடைய முதலாளி வானொலி நிகழ்ச்சியின் மூலம் கேட்டிருந்த ஹிதவதீயைப் பற்றி நினைவு கூர்ந்தாள். உடனே, ஹிதவதீயிற்கு அழைப்பை ஏற்படுத்தி ஆலோசனை கேட்கும்படி கூறினாள். நாலிகா ஹிதவதியிற்கு அழைப்பை ஏற்படுத்தினாள். குரலில் மிகவும் நடுக்கம் தெரிந்தது. தனக்கு நடந்தனவற்றை மெதுவாக ஹிதவதியிடம் கூறினாள். ஹிதவதி, நாலிகாவை மிரட்டிய இனந்தெரியாத அந்த நபரை பேஸ்புக்கில் ரிப்போர்ட் செய்து, முடக்கும்படி கேட்டுக் கொண்டது. மேலும் மிரட்டல் செய்பவருடன் எவ்விதத் தொடர்புகளையும் வைக்கக் கூடாது எனவும் கூறியது. மேலும், இதன் பின்னணியில் உள்ள நபரைக் கண்டுபிடித்து தண்டிக்க (சட்ட நடவடிக்கை எடுக்க) விரும்பினால், குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் (CID) சமூக ஊடகப் பிரிவில் புகார் அளிக்கும்படியும் கூறியது. இறுதியில் தனது பிரச்சினைகளைக் கேட்டு, சரியான வழிகாட்டுதலுடன் தன்னை அமைதிப்படுத்தி உதவியமைக்காக ஹிதவதியிற்கு நன்றி தெரிவித்தாள் நாலிகா.

முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

  • குழுவைப் பற்றிய சரியான விபரங்களை (குழு நிர்வாகி, அவற்றில் பேசப்படும் விடயங்கள், குழு உறுப்பினர்கள் போன்றவை) அறிந்து கொள்ளாது, குழுக்களில் இணைந்துகொள்ள வேண்டாம்.
  • மிரட்டும் நபர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த முயற்சிக்காதீர்கள்.
  • சூழ்நிலை எவ்வளவு இக்கட்டானதாக இருந்தாலும் (நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்) நம்பகமானதொரு தரப்பு அல்லது ஒரு சட்ட அமைப்பிடம் உடனடியாக ஆலோசனை பெறவும்.
  • மிரட்டும் நபர்கள், சமூக ஊடக தளம் மூலம் உங்களை அணுகினால், அவர்களுடைய கணக்கை ரிப்போர்ட் செய்து, முடக்கலாம். சைபர்குற்றப் புகார்கள் சம்பந்தப்பட்ட ஆதாரங்களுடன் (சரியான இணைப்புகள் (links),
  • • ஸ்கிரீன் ஷாட்கள் போன்றவை) தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அவற்றை CID யிடம் ஒப்படைக்கலாம் அல்லது “பணிப்பாளர், குற்றவியல் விசாரணை திணைக்களம், கொழும்பு 01” என்ற முகவரியிற்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பலாம். அல்லது, dir.ccid@police.gov.lk இற்கு மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.