கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 18, 2023

திலினி படிக்கும் போது ஒரு பகுதி நேர வேலையையும் செய்து வந்தாள். பேக்கிங் (Baking) வேலையில் திறமையானவள் அவள். அதனால் பகுதி நேர வேலையாக கப் கேக்குகளை (cupcakes) தயாரித்து வந்தாள். அவளுடைய சிறியளவினதான வியாபாரத்தை விளம்பரப் படுத்துவதற்காக பேஸ்புக்கில் தனக்கான ஒரு பக்கத்தை கூட வைத்திருந்தாள். அவள் தயாரித்த தனது கப்கேக்களை தனது தொலைபேசியினூடாக படமெடுத்து, அவற்றை விளம்பரப்படுத்துவதற்காக பேஸ்புக்கில் பதிவிடுவாள். இதனால் பேஸ்புக்கில் அவளுடைய பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததோடு அவள் தனது நகரத்திலும் சிறிது பிரபலமானாள்.

வியாபார நோக்கிலேயே அவள் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தினாள். வாடிக்கையாளர்களிடமிருந்து ஓடர்களை பெறும் பொருட்டு அடிக்கடி செய்திகளைப் பெற்றுக் கொண்டாள்.

ஒரு நாள் அவள் தனது பேஸ்புக் மெசஞ்சரில் (messenger) செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த போது, வழமைக்கு மாறான செய்திகளைக் கண்டாள். ஒரு நபரிடமிருந்து வீடியோக்கள் சில மெசன்ஞர் இன்பாக்ஸிற்கு வந்தன. திலினி வீடியோவை கிளிக் செய்தாள். அவள் அதிர்ந்து போனாள். இருண்ட பின்ணனியுடன் கூடிய நிர்வாண வீடியோ அது. வீடியோவில் உள்ள நபர் எல்லா விதத்திலும் அவளைப் போன்றே இருந்தாள். வீடியோவில் உள்ள பெண் தன்னைப் போலவே இருந்தமையால் ஒரு கணம் இதை நம்ப முடியாமல் இருந்தாள். எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு தொலைபேசியை தூக்கி எறிந்தாள். அவளுடைய கன்னங்கள் வழியாக கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

பீப் பீப் (அவளுடைய தொலைபேசியில் செய்திகள் வந்து கொண்டிருந்தன.)

தொலைபேசியை எடுத்துப் பார்க்கவும் கூட அவள் விரும்பவில்லை. சில நிமிடங்களாக சிலைபோல் இருந்தாள்.

சிறிது நேரம் கழித்து, திலினி தனது தொலைபேசியை எடுத்துப் பார்த்தாள். அதில் “நைட் ரைடர்” என்ற அதே ப்ரொபைலில் (profile)  கணக்கிலிருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது.

நைட் ரைடர்: ஹேய் கப்கேக், என்ன ஒரு சூடான வீடியோ, இது ரொம்ப செக்ஸியாக இருக்கிறது.

திலினி: இது நான் இல்லை, யார் நீ?

நைட் ரைடர்: நீ இல்லை, ஹா ஹா, அது நீயல்ல என்றால் இந்த வீடியோவை உனது நண்பர்களுக்கும் குடும்பத்துக்கும் அனுப்பிப் பார்ப்போம், ஹா ஹா.

திலினி: தயவு செய்து அவ்வாறு செய்யாதே. நீ ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்?

நைட் ரைடர்: நான் அதை பகிர்வது கூடாதென நீ கருதினால் நான் அதை செய்ய மாட்டேன்.

திலினி: தயவு செய்து அவ்வாறு செய்யாதீர்…. மக்கள் என்னை தவறாகப் புரிந்து கொள்வார்கள்.  நான் உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன்!

நைட் ரைடர்: சரி…. ஆனால் நீ ஒரு வேலை செய்ய வேண்டும்.

திலினி: அது என்ன?

நைட் ரைடர்: இந்த வீடியோவில் உள்ளது போலவே நீயும் வீடியோ காலில் (video call) இருக்க வேண்டும். நான் அந்த வீடியோவை அழிப்பேன். வீடியோ காலிலுள்ள உன்னுடைய வீடியோவை சத்தியமாக நான் பதிவு செய்ய மாட்டேன்.

திலினி நடுக்கம் கொண்டவளாக தனது போனை வேகமாக ஆப் செய்தாள்.

வேறு வேலைகளை செய்ய முயன்றாள். என்றாலும் அவற்றில் கவனம் செலுத்த முடியாதவளாகினாள். மீண்டும் தனது தொலைபேசியை எடுத்தாள். அதே நபரிடமிருந்து மீண்டும் ஒரு புதிய செய்தி வந்திருந்தது.

நைட் ரைடர்: வா பெண்ணே!!! இது ஒரு ஒப்பந்தம். தவறாக ஏதும் நடக்காது. சரியாக இரவு 7 மணிக்கு சந்திப்போம்.

திலினி பதிலேதும் அளிக்கவில்லை. அவள் பயத்தோடு வேகமாக நேரத்தைப் பார்த்தாள். அப்போது நேரம் மாலை 4.30 மணி. அவள்  தனது சகோதரியுடன் மிகவும் நெருக்கமாக இருந்தாள். உடனே அவளுக்கு அழைப்பு விடுத்து அனைத்தையும் கூறினாள். அவளது சகோதரி அலுவலகத்தில் இருந்ததனால் பெண்களை மிரட்டுதல் குறித்து இணையத்தில் தேடி, ஹிதவதி இணையத்தளத்தைப் பார்த்தாள். உடனடியாகவே ஹிதவதியிற்கு அழைப்பு விடுக்கும் படி திலினியிடம் கூறினாள்.

ஹிதவதியிற்கு அழைப்பு விடுத்தாள் திலினி. அவள் மிகவும் பதட்டமாக இருந்தாள். முதலில் திலினியிடம் அமைதியாக இருக்கும் படி கூறிய ஹிதவதி பின்பு அவளுடைய கதையை கேட்கத் தொடங்கியது. மக்கள் பல்வேறு கருவிகளைக் கொண்டு படங்கள் மற்றும் வீடியோக்களில் மாற்றங்கள் செய்யலாம் என்பதை ஹிதவதி அவளுக்கு தெரியப்படுத்தியது. மேலும் அந்த வீடியோவில் அவள் இல்லாத பட்சத்தில் எவ்விதத்திலும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் திலினிக்கு சொல்லப்பட்டது. அந்த நபரால் மிரட்டப்பட்டமை தொடர்பாக, சிஐடி – சமூக ஊடகப் பிரிவில் புகார் செய்வதற்காக அவன் அனுப்பிய மிரட்டல் செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்களைப் பெறுமாறு ஹிதவதியால் திலினிக்கு  கூறப்பட்டது. அதேவேளை குறித்த நபருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவனை பேஸ்புக்கில் தடை செய்யும் படியும் திலினி அறிவுறுத்தப்பட்டாள். அத்தோடு இந்த எதிர்பாராத நிகழ்வால் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பின்,  மன அழுத்த நிவாரணத்திற்காக 1926 (சிறப்பு மனநல நேரடி தொலைபேசி எண்)  ஐத் தொடர்பு கொள்ளுமாறு ஹிதவதியால் திலினி கேட்டுக் கொள்ளப்பட்டாள்.

Precaution tips:

  • உங்களை அச்சுறுத்தும்/மிரட்டும் செய்திகள் மற்றும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம்.
  • அச்சுறுத்தும் நபர்கள் நம்ப முடியாதவர்களாவர். எனவே அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடாத்த முயற்சிக்காதீர்கள்.
  • மிரட்டுபவர் அனுப்பிய செய்திகளை ஸ்கிரீன் ஷாட்களாக வைத்துக்கொள்ளவும் – ஆதாரங்களுக்காக.
  • இணைய முறைப்பாடுகளை (cyber complaints),  பொருத்தமான ஆதாரங்களோடு (link, screenshots போன்றவை) CID  யிடம் ஒப்படைக்கலாம். அல்லது பதிவுத் தபாலில் “The Director, Criminal Investigation Department, Colombo 01” என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், dir.cid@police.gov.lk என்ற மின்னஞசல் ஊடாகவும் அனுப்பி வைக்க முடியும்.
  • இது போன்ற சம்பவங்களால் மனம் சோர்ந்து இருப்பின் 1926 (சிறப்பு மனநல நேரடி தொலைபேசி எண்) ஐத் தொடர்பு கொள்ளவும்.