கடைசியாக புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 20, 2026
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் கற்பனையானவை.

நெத்மி குறுகிய காலத்திலேயே சமூக ஊடகங்களில் பிரபலமான செல்வாக்காளராக (Social Media Influencer) மாறியிருந்தார். ஆயிரக்கணக்கான பின்தொடர்பாளர்களையும் பல்வேறு நிறுவனங்களுடனான விளம்பர ஒப்பந்தங்களையும் பெற்றிருந்த அவர், தனது இணையவழிப் பிரபல்யத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பினார். இருப்பினும், வளர்ந்து வந்த தனது தொழில்முறை நடவடிக்கைகளைத் தனியாக நிர்வகிப்பது அவருக்குச் சிரமமாக இருந்தது.
இதனால், தனக்கென ஒரு சமூக ஊடக முகாமையாளரைத் தேடுவதாக அவர் சமூக ஊடகங்களில் அறிவித்தார். விண்ணப்பதாரர்களில் ஒருவராக ஆஷென் என்ற இளைஞரும் இருந்தார். துணிச்சலான யோசனைகளையும் வழக்கத்திற்கு மாறான உத்திகளையும் கொண்டிருந்த அவர், நெத்மியின் கவனத்தை ஈர்த்தார். அவரது புதுமையான முன்மொழிவுகளால் கவரப்பட்ட நெத்மி, அவரைப் பணிக்கு அமர்த்தினார்.
ஆஷென் விரைவிலேயே தனது திறமையை நிரூபித்தார். சில மாதங்களுக்குள், நெத்மிக்கு பிரத்தியேகமான விளம்பர ஒப்பந்தங்கள், உயர்மட்ட நிகழ்வுகளுக்கான அழைப்புகள் மற்றும் செல்வாக்கு மிக்க செல்வந்தர்களுடனான தொடர்புகள் கிடைக்க உதவினார். இதனால் அவரது பிரபல்யமும் வருமானமும் கணிசமாக அதிகரித்தன. ஆஷெனின் அர்ப்பணிப்பால் ஈர்க்கப்பட்ட நெத்மி, தனது சமூக ஊடகக் கணக்குகள், தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் தனது கைப்பேசி உள்ளிட்ட அனைத்தையும் அவரிடம் ஒப்படைக்கும் அளவிற்கு நம்பிக்கை கொண்டிருந்தார்.
அதிகரித்து வந்த பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக, தனது தொழில்முறை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த உதவும் எனக் கூறி ஆஷென் நெத்மியின் கைப்பேசியில் ஒரு செயலியை நிறுவினார். ஆனால் உண்மையில் அது உளவு மென்பொருளாக (Spyware) இருந்தது. அது நெத்மியின் செய்திகள், புகைப்படங்கள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையச் செயல்பாடுகளை அவருக்குத் தெரியாமல் கண்காணித்தது.
நெத்மியின் தொழில்முறை வெற்றிக்குப் பின்னால், ஆஷென் மிகவும் மோசமானதொரு திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருந்தார். நெத்மியின் பெயரைப் பயன்படுத்தி ஒரு போலியான Facebook ரசிகர் குழுவை உருவாக்கியிருந்தார். வெளிப்பார்வைக்கு அது ஒரு சாதாரண பிரபல்ய ரசிகர் சமூகமாகத் தோன்றியது. ஆனால், அதன் உள்ளே மறைக்கப்பட்ட VIP வலையமைப்பு ஒன்று செயல்பட்டு வந்தது. அதில் செல்வந்தர்கள் பிரத்தியேக அணுகலைப் பெறுவதற்காகப் பணம் செலுத்தினர். நெத்மியின் அறிவோ சம்மதமோ இன்றி, அவரது தனிப்பட்ட மற்றும் அந்தரங்கப் புகைப்படங்களை ஆஷென் விற்பனை செய்ததுடன், பணத்திற்காக அவருக்கும் அந்தச் செல்வந்தர்களுக்கும் இடையில் சந்திப்புகளையும் ஏற்பாடு செய்தார்.
மேலும், பரபரப்பான வேலை அட்டவணை மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகளின்போது ஓய்வாக இருக்க உதவும் எனக் கூறி ஆஷென் அவருக்கு மாத்திரைகளையும் வழங்கத் தொடங்கினார். அவற்றை உட்கொண்ட பின்னர் நெத்மிக்கு அவ்வப்போது தலைச்சுற்றல் மற்றும் சில நிகழ்வுகள் குறித்த நினைவிழப்புகள் ஏற்பட்டன. ஆனால், தனக்குப் போதைப்பொருள் வழங்கப்பட்டு பாலியல் ரீதியாகச் சுரண்டப்படுவதை அவர் அறிந்திருக்கவில்லை.
ஒருநாள், முக்கியமான விளம்பரப் பிரசாரத்திற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தபோது, தனது கைப்பேசியில் சந்தேகத்திற்கிடமான செயலி ஒன்று இருப்பதை நெத்மி கவனித்தார். இது குறித்து ஆஷெனிடம் கேட்டபோது, அவர் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நெத்மியின் சந்தேகங்களை நிராகரித்தார். இருப்பினும், ஏதோ தவறாக இருப்பதாக உணர்ந்த நெத்மி, தொழில்நுட்ப நிபுணர் ஒருவரின் உதவியை நாடினார். அவரது கைப்பேசி உளவு மென்பொருள் மூலம் ஊடுருவப்பட்டிருப்பதை அந்த நிபுணர் கண்டறிந்தார்.
அதே காலப்பகுதியில், நெத்மிக்கு வழக்கத்திற்கு மாறான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டதுடன், தான் கர்ப்பமாக இருப்பதையும் அறிந்துகொண்டார். எந்தவொரு பாலியல் உறவிற்கும் தான் சம்மதம் தெரிவித்ததாக நினைவில்லாததாலும், அது எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்த நினைவுகள் இல்லாததாலும் அவர் அதிர்ச்சியடைந்தார்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நெத்மி, ஹிதவதியை தொடர்புகொண்டு தனக்கு நேர்ந்தவற்றை விளக்கினார். தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, தொடர்புடைய டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாப்பது மற்றும் சந்தேகத்திற்கிடமான இணையவழிச் சுரண்டல் மற்றும் அனுமதியற்ற கண்காணிப்பு தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்வது குறித்து ஹிதவதி அவருக்கு வழிகாட்டியது. மேலும், மருத்துவ உதவியை நாடவும், சந்தேகத்திற்கிடமான பாலியல் சுரண்டல் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யவும் நெத்மிக்கு அறிவுறுத்தப்பட்டது.
நெத்மி பொலிஸாரை அணுகியபோது, இதேபோன்ற அனுபவத்தை எதிர்கொண்ட மற்றுமொரு பெண் தொடர்பான சந்தேகத்திற்கிடமான மனிதக் கடத்தல் நடவடிக்கையுடன் அவரது சம்பவத்திற்கும் தொடர்புகள் இருப்பதை விசாரணையாளர்கள் கண்டறிந்தனர். நம்பகமான வாய்ப்புகளைப் போன்று தோற்றமளிக்கும் வேலைவாய்ப்புகள் மூலம் பெண்கள் ஏமாற்றப்பட்டு சுரண்டப்பட்ட சம்பவங்களும் விசாரணையில் வெளிவந்தன.
மேலதிக விசாரணைகளில், நெத்மியின் முகாமையாளராக இருந்த தனது பதவியைப் பயன்படுத்தி அவரது நம்பிக்கையைப் பெற்றுக்கொண்ட ஆஷென், இரகசியமாக அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்து, செல்வந்தர்கள் அடங்கிய வலையமைப்பின் ஊடாக அவரைச் சுரண்டி வந்தமை தெரியவந்தது. நெத்மியின் தொழில்முறை வளர்ச்சிக்கு உதவும் உயர்மட்டத் தொடர்புகளாகத் தோன்றிய அனைத்தும் உண்மையில் மனிதக் கடத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்தன.
இறுதியில், ஆஷென் கைது செய்யப்பட்டார். இதன் மூலம் நெத்மியின் வெற்றிகரமான வாழ்க்கைக்குப் பின்னால் மறைந்திருந்த அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமானது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- உங்கள் சமூக ஊடகக் கணக்குகள், தனிப்பட்ட சாதனங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களுக்கான அணுகலை மற்றவர்களுக்கு வழங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்.
- அறிமுகமில்லாத செயலிகளை அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் அனுமதிகளின் தன்மையைச் சரிபார்க்காமல் ஒருபோதும் நிறுவ வேண்டாம்.
- சந்தேகத்திற்கிடமான செயலிகள் மற்றும் வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள் உள்ளனவா என்பதை உங்கள் கைப்பேசியில் தவறாமல் சரிபார்க்கவும்.
- பிரத்தியேகமான வணிக வாய்ப்புகள், தனிப்பட்ட அழைப்புகள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களுடன் தொடர்புடைய வாய்ப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
- உங்கள் தனிப்பட்ட முடிவுகள், நடமாட்டங்கள் மற்றும் தொடர்பாடல்களை வேறு எவரும் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள்.
- தொடர்புடைய ஆதாரங்களைப் பாதுகாத்து, சம்பவங்கள் குறித்து உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யுங்கள்.
- இணையப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டால் ஹிதவதியை தொடர்புகொண்டு வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
- உங்கள் கைப்பேசி ஊடுருவப்பட்டுள்ளதாகச் சந்தேகித்தால், தொழில்நுட்ப உதவியை நாடுவதுடன், நம்பகமான வேறொரு சாதனத்தைப் பயன்படுத்தி உங்கள் முக்கியமான கணக்குகளின் கடவுச்சொற்களையும் மாற்றிக்கொள்ளுங்கள்.
