கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 17, 2026
கொழும்பு, இலங்கை — LK Domain Registry இன் சமூக வலுவூட்டல் பிரிவான FOUNDATION.LK, தனது ஹீதவதீ டீன்ஸ் ஹப் விரிவாக்கத் திட்டத்திற்காக, PMI Colombo, Sri Lanka Chapter ஏற்பாடு செய்த தேசிய திட்ட முகாமைத்துவ சிறப்புத் திறன் விருதுகள் (National Project Management Excellence Awards – NPMEA) 2026 இல் தங்க விருதை வென்று குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது.
இத்திட்டம் சமூக அபிவிருத்தி / அரசு சாரா அமைப்புத் துறையில் சிறப்பாக நிர்வகிக்கப்பட்ட திட்டம் (Category 13 – Best Managed Project in Community Development / NGO) என்ற பிரிவின் கீழ் கௌரவிக்கப்பட்டது. இவ்விருது, திட்ட முகாமைத்துவத்தில் காணப்பட்ட சிறப்பையும், இளைஞர்களுக்காக பாதுகாப்பான டிஜிட்டல் சூழல்களை உருவாக்குவதில் இத்திட்டம் வழங்கிய பங்களிப்பையும் அங்கீகரிக்கிறது.
2026 ஆகஸ்ட் 18 ஆம் திகதி பத்தரமுல்லை, வாட்டர்ஸ் எட்ஜ் (Waters Edge) இல் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்ட இந்த விருது, FOUNDATION.LK மற்றும் ஹீதவதீ ஆகியவற்றிற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இது இலங்கை சமூகங்களிடையே இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் வலுவூட்டலை மேம்படுத்துவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இளைஞர்களை இணையத்தில் பாதுகாப்பாக இருக்க வலுவூட்டுதல்
FOUNDATION.LK இன் முதன்மைத் திட்டமான ஹீதவதீ, இலங்கையர்களிடையே இணையப் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான டிஜிட்டல் நடத்தை தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விழிப்புணர்வு, கல்வி மற்றும் அதன் இலவச மும்மொழி ஆதரவு சேவைகள் மூலம், டிஜிட்டல் உலகில் சமூகங்கள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் பயணிக்க ஹீதவதி உதவுகிறது.
ஹீதவதீ டீன்ஸ் ஹப் முன்னெடுப்பு, மாணவர்கள் இணையப் பாதுகாப்பு குறித்து கற்றுக்கொள்ளவும், பொறுப்பான டிஜிட்டல் நடத்தையைப் புரிந்துகொள்ளவும், தாங்கள் கற்றுக்கொண்ட அறிவை சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் கூடிய பாடசாலை அடிப்படையிலான இடங்களை உருவாக்கும் நோக்கில் ஆரம்பத்தில் ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
முன்னோடித் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, LK Domain Registry இன் அனுசரணையுடன், மேலும் பல பாடசாலைகளுக்கு இந்நிகழ்ச்சித் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக LK Domain Registry இன் Domain Registrar / பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் கிஹான் டயஸ் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இந்த முன்னெடுப்பு விரிவுபடுத்தப்பட்டது.
ஹீதவதீ டீன்ஸ் ஹப் விரிவாக்கத் திட்டம், 2023 நவம்பர் முதல் 2025 ஏப்ரல் வரை செயல்படுத்தப்பட்டு, பதுளை, பஸ்ஸர மற்றும் கலேவெல கல்வி வலயங்களில் உள்ள 29 மேலதிக பாடசாலைகளில் டீன்ஸ் ஹப்களை நிறுவியது. ஆரம்ப முன்னோடித் திட்டம், Meta மற்றும் The Asia Foundation ஆகியவற்றின் கூட்டாண்மையான Resiliency Initiative மூலம் நிதியளிக்கப்பட்டது.
நிலையான இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வை உருவாக்குதல்
இந்த விரிவாக்கத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, ஒருமுறை மட்டுமே நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு அப்பால் சென்று, இணையப் பாதுகாப்பிற்கான நிலையான, பாடசாலை அடிப்படையிலான அணுகுமுறையை உருவாக்குவதாகும்.
டீன்ஸ் ஹப்கள் மூலம், ஆசிரியர்களும் மாணவர்களும் தங்களது பாடசாலை சமூகங்களுக்குள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதில் செயற்பாட்டுடன் பங்கேற்க ஊக்குவிக்கப்பட்டனர். இந்தத் திட்டம் கல்வி அமைச்சு, வலயக் கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களை ஒன்றிணைத்தது.
இத்திட்டம் திட்டமிடல், பங்குதாரர் ஒருங்கிணைப்பு, இடர் முகாமைத்துவம், கண்காணிப்பு மற்றும் திட்ட நிறைவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையைப் பின்பற்றியது. இது திட்டத்தின் வெற்றிகரமான செயல்படுத்தலுக்கும் அதன் நீண்டகால தாக்கத்திற்கும் பங்களித்தது.
சிறப்புத் திறனுக்கான அங்கீகாரம்
NPMEA 2026 இல் பெற்ற தங்க விருது, திட்ட முகாமைத்துவத்தின் தரத்தையும், இந்த முன்னெடுப்பின் மூலம் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட அர்த்தமுள்ள மற்றும் நேர்மறையான விளைவுகளையும் அங்கீகரிக்கிறது.
விருது வழங்கும் நிகழ்வில் FOUNDATION.LK சார்பில் FOUNDATION.LK இன் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி நிரோஜா ஜயவிக்ரம மற்றும் ஹீதவதி திட்ட முகாமையாளர் திருமதி திலுஷா டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

“இந்த அங்கீகாரம் FOUNDATION.LK மற்றும் முழு ஹீதவதி குழுவிற்கும் பெருமைமிக்க தருணமாகும். மேலும், டீன்ஸ் ஹப் முன்னெடுப்பை வெற்றியடையச் செய்வதில் பங்களித்த எமது பங்குதாரர்கள், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு முயற்சிகளுக்கும் இது அங்கீகாரம் அளிக்கிறது,” என FOUNDATION.LK இன் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி நிரோஜா ஜயவிக்ரம தெரிவித்தார்.
இந்த அங்கீகாரம், டிஜிட்டல் ரீதியாக வலுவூட்டப்பட்ட சமூகங்களை உருவாக்குவது என்ற FOUNDATION.LK இன் தொலைநோக்குப் பார்வைக்கான அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது. அதேவேளை, குறிப்பாக இளைஞர்கள் உட்பட இலங்கையர்கள் டிஜிட்டல் தளங்களை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்த உதவுவது என்ற தனது பணியை ஹீதவதி தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
ஹீதவதீ என்பது இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், இலங்கையர்கள் டிஜிட்டல் உலகில் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் பயணிக்க அவர்களை வலுவூட்டுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட FOUNDATION.LK இன் ஒரு திட்டமாகும்.
புகைப்படங்களுக்கான நன்றிகள்: NPMEA 2026 ஏற்பாட்டாளர்கள்
