கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 28, 2023

இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை.

கவிதா 28 வயதான ஒரு பெண், அவளது வசீகரமான ஆளுமைக்காக அவள் பெற்றோர் மற்றும் உறவினர்களால் மிகவும் நேசிக்கப்பட்டவராக இருந்தாள். மற்ற அனைவரும் மகன்கள் என்பதால் கவிதா குடும்பத்தின் ஒரே மகளாவார்.

கவிதா தனது மேற்படிப்பை முடித்தவுடனேயே, அவளுக்கு ஒரு நல்ல ஆண்மகனைக் கண்டுபிடித்துத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவளுடைய பெற்றோர் விரும்பினர். அதனால் அவளுக்கு ஒரு நல்ல துணையைத் தேட ஆரம்பித்தார்கள். இந்த நேரத்தில் கவிதாவுக்கு பேஸ்புக் மெசஞ்சரில் சில செய்திகள் வருகின்றன.

பல்கலைக்கழக மாணவன் என்று தன்னை கூறிக்கொள்ளும் ஒருவர் கவிதாவுடன் அரட்டை அடிக்க ஆரம்பித்தார். இரவு பகலாக இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். இது இவ்வாறு தொடர, கவிதா அந்த நபரை காதலிக்க ஆரம்பித்தாள் . அரட்டையடிப்பதைத் தவிர, இருவரும் மணிக்கணக்கில் மெசஞ்சர் மூலமாக அழைப்புகளையும் மேற்கொள்ளத் தொடங்கினர்.

இது இவ்வாறே தொடர, சில நாட்கள் கழித்து, ஒரு நாள் இந்த பையன் கவிதாவை அழைக்கிறான்;

பையன்: கவி, எனக்கு இன்று அதிக நேரம் பேச முடியாது. பல்கலைக்கழகத்திற்கான இறுதிக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பதால் எனக்கு அவசரமாகக் கொஞ்சம் பணம் தேவை

கவிதா: சொரி டியர், என்னிடமும் பணம் இல்லையே

பையன்: குறைந்தபட்சம் உன் நண்பர்களிடமிருந்தாவது கொஞ்சம் பணத்தை எடுக்க முயற்சி செய்,

கவிதா: என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்

அவன் எப்படியாவது பணத்தை எடுத்துத்தர வேண்டும் என்ற நிலைக்கு கவிதாவைத் தள்ளுகிறான், கவிதா பணத்தைப் பெற ஒரு வழியை யோசிக்கிறாள். திடீரென்று அவளுக்கு அவளுடைய பெற்றோர் கொடுத்த நகைகள் அனைத்தும் நினைவுக்கு வந்தன. அவளது திருமணத்திற்கு ஆயத்தமாகவே இந்த நகைகளை அவர்கள் செய்திருக்கிறார்கள். சிறிதும் யோசிக்காமல் உடனே அவற்றை வங்கியில் அடகு வைத்து தேவையான பணத்தைப் பெறுகிறாள். வீட்டிற்கு வந்த கவிதா பிறகு அவள் காதலனை அழைக்கிறாள்;

கவிதா: ஹெலோ, நான் எனது நகைகளை அடகு வைத்து பணம் பெற்றேன், உங்கள் வங்கி கணக்கு விபரங்களை அனுப்புங்கள் நான் பணத்தை வைப்புச் செய்துவிடுகிறேன்.

பையன்: மிக்க நன்றி அன்பே. நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். நீ தான் என் உண்மையான காதல். இது எனது வங்கிக் கணக்கு இலக்கம் xxxxxxxxxx. இரவுக்கு நான் உன்னுடன் கதைக்கிறேன். உன்னை கவனித்துக் கொள்.

கவிதா பணத்தை வைப்புச் செய்து விட்டு அன்று இரவு அவனது அழைப்புக்காகக் காத்திருந்தாள் ஆனால் அவன் அழைக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, அவள் அவனுடன் மெசஞ்சரில் பேச முயல்கிறாள், ஆனால் அவனுடைய பேஸ்புக் கணக்கைக் காண முடியவில்லை
நாட்கள் செல்ல, கவிதா மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். தன் காதலனைப் பற்றி அவள் எப்போதும் கவலைப்படுகிறாள். ஒரு நாள் கவிதாவிடம் பணம் வாங்கியவன் அவளை அழைத்து இவ்வாறு சொல்கிறான்.

பையன்: என்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்காதே. நான் திருமணமானவன், எனக்குக் குழந்தைகளும் இருக்கிறார்கள். நீ மறுபடியும் எப்போதாவது என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்தால். நான் உன்னைக் கொன்று விடுவேன்.

கவிதா அதிர்ச்சியடைகிறாள், அவளது மன உளைச்சல் நிலை அதிகரிக்கிறது. அவள் கடுமையாக அழுகிறாள். இந்த நேரத்தில் அவள் பேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு காணொளியைப் பார்த்து ஹிதவதியைப் பற்றி அறிந்து கொள்கிறாள். பின்னர் ஹிதவதி இணையதளத்திற்குச் சென்று அவர்களுடன் பேசுகிறாள். தனக்கு நடந்த துயரத்தை ஹிதவதியிடம் கூறுகிறாள். ஹிதவதி, கவிதா சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்டு அவளைக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சமூக ஊடகப் பிரிவிடம் அனுப்புகிறார்கள். மேலும் சட்ட ரீதியான ஆதரவைப் பெற, விமென் இன் நீட்-Women In Need (WIN) இடம் அவரை ஹிதவதி வழிநடத்தினர். கவிதா மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதால், இந்த கடினமான நேரத்தில் உறுதியாக இருக்குமாறு ஹிதவதி கவிதாவிடம் கேட்டுக்கொண்டதுடன், அவளை 1926 (சிறப்பு மனநல ஆதரவு சேவை) அல்லது சுமித்திராயோவினை தொடர்பு கொள்ளும் படி கேட்டுக்கொண்டனர்.

முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

  • இணையத்தகவல் ஊடுவெளியில் (சைபர்ஸ்பேஸில்) உங்களுடன் அரட்டை அடிக்கும் தெரியாத நபர்களை நம்ப வேண்டாம்.
  • நீங்கள் இணையத்தில் சந்திக்கும் இனம் தெரியாத நபர்களுக்கு நிதி உதவி வழங்காதீர்கள்.
  • சைபர்-குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள், அதனுடன் தொடர்புடைய ஆதாரங்களுடன் (சரியான இணைப்புகள், திரைக்காட்சிகள் போன்றவை) தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அவற்றை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கலாம் அல்லது பதிவுத் தபாலில் “பணிப்பாளர், குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு 01” என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், dir.ccid@police.gov.lk எனும் மின்னஞ்சலூடகவும் அனுப்ப முடியும்.